Saturday 16 December 2017

சிம்ஃபனி ஆப் தி ஸீஸ் - உலகின் மிகப்பெரிய உல்லாச பயண கப்பல்


                                                                                  புகைப்படம்: ராயல் கரீபியன் இண்டர்நேஷனல்

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இப்போது பிரான்ஸ் நாட்டில் தயாரிப்பில் இருக்கும் உலகின் மிகப்பெரிய உல்லாச பயண கப்பலான சிம்ஃபனி ஆப் தி ஸீஸ் (கடலின் சிம்ஃபனி)  தன் முதல் பயணத்தை துவங்க உள்ளது. 230,000 டன் மொத்த எடை கொண்ட இந்த கப்பல் கடலில் ஒரு சிறிய மிதக்கும் நகரம் போல் காட்சியளிக்கிறது. 




இந்த கப்பலை தயாரித்து வரும் நிறுவனமான ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் இதற்கு முன்பு உலகின் மிகப்பெரிய கப்பலான ஹார்மனி ஆப் தி ஸீஸ் என்ற பெயருள்ள கப்பலை தயாரித்து அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ஃபனி ஆப் தி ஸீஸ் கப்பலுக்கு தம்பி என்று ஹார்மனி ஆப் தி ஸீஸ் கப்பலை சொல்லலாம். 

                                                                                                      புகைப்படம்: ராயல் கரீபியன் இண்டர்நேஷனல்

பதினாறு தளங்களில் 2759 தங்கும் அறைகளை கொண்டுள்ள இந்த சொகுசு கப்பலின்  முதல் பயணத்தில் 5500 விருந்தினர்கள் பயணம் செய்ய உள்ளனர். ஒரு சொகுசு கப்பலுக்கு உரிய எல்லா உயர்தர சேவைகளையும் இந்த கப்பலில் அனுபவிக்க முடியும். பயணிகளை மகிழ்விக்க கப்பலுக்கு உள்ளே தண்ணீர் பூங்கா, லேசர் ஷோ அரங்கம், பனி சறுக்கு விளையாட்டு தளம், மலையேற்ற பொழுதுபோக்கு அரங்கு, ஷாப்பிங் மால், தியேட்டர்கள், நைட் கிளப், காசினோக்கள், ரோபோக்கள் வேலை பார்க்கும் பார் என்று இந்த கப்பலுக்குள் ஒரு உல்லாச நகரத்தை உருவாக்கியுள்ளனர். 

புகைப்படம்: ராயல் கரீபியன் இண்டர்நேஷனல்

மத்திய தரைக்கடல் பகுதியில் பயனத்தை துவக்கி ஐரோப்பிய கடற்பகுதிகளைச் சுற்றி பயணம் மேற்கொண்டு, மியாமி துறைமுகம் வழியாக கரிபியன் கடற்கரை நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோடை காலத்தில் இந்த கப்பலில் பயணிக்கும் விருந்தினர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த கடல் பயண அனுபவத்தை தரும் என்று நம்பலாம்.